Rss Feed
  1. பனுவல்

    ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

    பனுவல்

  2. சுவடி

  3. கட்டுரை
    நெடுவழித் தனிமரம்
    *********************************
    **********************************
              பாகம் ---- 1

                             ----முரளிஅரூபன்

         அட்சரத்திற்கு லட்சம் என்று சொல்வார்களே அதைப்போல 1950களிலேயே திரைப்பாடல் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கிய நட்சத்திரக் கவிஞராகத்(தகவல் உபயம் காதர் ஷெரீப்)திகழ்ந்த கவி கா.மு.ஷெரீப் தமது திரைப்பாடல்கள் சிலபோது பிறர் பெயரில் வெளிவருவதை வெகு எளிதாகக் கடந்துபோன செய்தி வியப்பூட்டுகிறது.    பாட்டுக்கு வாங்கிய அந்தப் பெருந்தொகைகூடத் தன்பாட்டுக்குப் போனதுண்டு பிறர் துயர்துடைக்க என்ற செய்தியும் நெகிழ வைக்கிறது.

         கதை,வசனம்,பாடல் எனத் திரைப்படப்பணி;  ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் எனப் பத்திரிகைப்பணி;  கட்சி, மாநாடு, போராட்டம், சிறைவாசம் என அரசியல் பணி;  இப்படியான பாறைகளுக்கிடையே பசுமை பூசிய தாவர மண்டலமாக அவரது இலக்கிய ஊழியம் இயன்றிருக்கிறது.  முக்கியமாகச் சீறாப்புராணத்திற்கான அவரது உரைப்பணியை விதந்துரைக்க வேண்டும்.  அதேநேரம் சீறாவுக்கு முன்னமேயே சிலப்பதிகாரத்திற்கு பத்திரிகையில்  உரையெழுதியுள்ள செய்தி என்னைத் தூங்கவிடாமல் துரத்தியது.

    கவி கா.மு.ஷெரீப்பின் கலை இலக்கிய அரசியல் வாழ்வை விரிவும் ஆழமும்கூடிய பனுவலாக எழுதப் பயணிக்கும் எனக்கு  இந்தச் செய்தி பேரின்பம் பயத்தது.  ஏற்கெனவே அவரது இலட்சிய வாழ்க்கை குறித்த  செய்திகளைக் காதாரக் கேட்டுக் கண்ணாரக் கலங்கிய என்னை இந்த இன்பச் செய்தி   திக்குமுக்காட வைத்துவிட்டது.  இந்நிலையில் அவரது சீறாப்புராண உரையை மறுவாசிப்புச் செய்துகொண்டேன்.    

    சீறாப்புராணத்திற்கு முன்பே சிலப்பதிகாரத்திற்கு  உரையெழுதித் தம்மைத் தயார்படுத்திக்கொண்ட செய்திக்குறிப்பை அந்நூலில் அவதானித்தபோது புலன்கள் கிளர்ச்சியுற்றன.    

    எட்டுத்திசை பதினாறு கோணங்களில் எல்லாம் அலைந்து திரிந்து கவி கா.மு.ஷெரீப்பின் சிலப்பதிகார உரையைக் கண்டடைந்தேன் அல்ஹம்துலுல்லாஹ்.  

          சிலப்பதிகாரம் ---  புகார்க்காண்டம் --- கானல்வரி   வரையிலான அவரது உரையை 250 பக்கங்களில் பதம்பிரித்து எழுதி நிறைவுசெய்துவிட்டேன்.  (இதுவரையில்தான் அவர் எழுதி இருக்கிறார். இதுகுறித்து அடுத்த பாகத்தில் எழுதுவேன்)  அந்தக் கைப்பிரதியை ஒளியச்சும் செய்துவிட்டேன்.  அந்த ஒளியச்சுப் படியில் பிழைதிருத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.  இன்ஷா அல்லா நூலாக்கம் பெற்று     வெளிவரும்.  

    அப்படியென்றால் கவி கா.மு.ஷெரீப்பின் இந்தச் சிலப்பதிகார உரை முதன்முதலாக   நூலாக்கம் பெற்றதாக இருக்கும் அல்ஹம்துலுல்லாஹ்.

         நூலைக் கண்டைந்த சம்பவங்கள் அடுத்த பாகத்தில்.

                             **********

  4. கண்ணாடித் திரைகளையும்
    காகிதச் சுவர்களையும் தாண்டி

    வெட்ட வெளியில்
    தனிப்பாடலாய் மலர்கிறது
    தனிப்பெரும் சூரியன்.

    வெள்ளம் வடிந்த
    நிலத்தின் ரேகையெனப் படிந்தன
    வைகறையின் நிறப்புனைவுகள்.

    மௌனத்தில் பதிவான ஓசைகள்
    பறவை மொழியில்
    இசைப்பாடலாய்
    இடம் பெயர

    பகலின்
    முரட்டு வழித்தடத்தைப்
    பட்டாம்பூச்சிகள்
    மிருதுவாக்கின.

    நாமோ
    வெறுமனே
    ஜன்னலைத் திறக்கிறோம்
    ஆகாயத்தைச் சதுரங்களாய்
    நறுக்கியவாறு

    தீமிதித்தல் போலும்
    தினசரிகள் மேய்ந்து
    கோப்பைத் தேநீராகப்
    பழுப்பேறிய தினங்களைப்
    பருகி முடிக்கிறோம்.

    ஒரு வாய்ப்பாடாக
    உச்சரித்துத் தீர்த்த பொழுதின்

    அற்றை இரவின்
    ஒற்றை நிலவும்

    மொட்டை மாடியின்
    மெல்லிய காற்றும்
    பேசவந்து
    பேச்சற்றுத் திகைக்கும்

    அப்போது நாம்
    கதவுகளை 


                                 *********














          மௌனத்தில் பதிவான  ஓசை                     


     ( தந்தையர் நாள் வாழ்த்துக்   
                             கவிதை)
    -------------------------------------------------------------------

    பெரிது பெரிது
     வானம் பெரிது

    வானமோ பூமிமேல் 
    விரித்த  போர்வை

    பூமியோ மண்துகள்
    பரப்பின்  சேர்க்கை

    மண்ணோ  கல்லின்
    மூலக்  கூறு

    கல்லோ  நதிகள்
    கொணர்ந்த  பேறு

    நதிகளோ கடலிடை
    நீண்டு  கலப்பவை

    கடலோ  புவியினும்
    காணப்  பெரிது

    கடலினும்  தந்தையர்
    தியாகம்  பெரிதே.

                             -----முரளிஅரூபன்
                                       20--06--2021